திருப்பூர்: மூன்று சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகள் காப்பகம் மூடல்! நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன்
கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், இந்த காப்பகத்திலிருந்த மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், இந்த காப்பகத்திலிருந்த 14 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அதில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுதொடர்பாக விசாரணை நடத்த சமூக நல பாதுகாப்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட சமூகநல பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர், விவேகானந்தா சேவாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் திருப்பூர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் மற்றும் கலெக்டர் வினீத் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-
ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கண்டு முதலமைச்சர் வருத்தமடைந்தார். இரவு நேரத்தில் காப்பாளர் யாரும் இல்லைகுழந்தைகள் காப்பகம் மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வந்தது.
காப்பக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனமாக செயல்பட்டு வந்ததாலும் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனியார் காப்பகத்தை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.விவேகானந்தா சேவாலய காப்பக சிறுவர்கள், ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுவர் என்று கூறினார்.