திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் - திரளான பக்தர்கள் தரிசனம்


திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் - திரளான பக்தர்கள் தரிசனம்
x

சென்னையில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. வழியெங்கும் ஒலித்த ‘கோவிந்தா, கோவிந்தா' பக்தி முழக்கம் பரவசத்தை ஏற்படுத்தியது.

சென்னை

ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருக்குடைகள் சமர்பிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன்படி, தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏழுமலையான் பிரம்மோற்சவ கருடசேவைக்கு சென்னையில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது.

இதைத்தொடர்ந்து, கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மக்கள் நலமும், வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருக்குடைகளுக்கு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மவுனகுரு பாலமுருகனடிமை சாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் கோவில் சச்சிதானந்தாசாமிகள் பூஜைகள் நடத்தினர்.

பின்னர் திருக்குடை ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

திருக்குடை ஊர்வலத்தை காண அங்கு திரளான பக்தர்கள் திரண்டு இருந்தனர். விண் அதிரும் பக்தி முழக்கங்களுடன், சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க 11 வெண்பட்டு குடைகளும் ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி முழக்கமிட்டனர். மக்கள் வெள்ளத்தில் 11 திருக்குடைகளும் ஆடி அசைந்து திருமலை திருப்பதியை நோக்கி புறப்பட்டது.

திருக்குடைகளுடன் பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வந்தன. ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

ஊர்வலம் செல்லும் வழியெல்லாம் பக்தர்கள் குடும்பத்துடன், திருக்குடைகளை தரிசித்து, அவற்றின் மீது பூக்களை தூவி, வணங்கினர். திருக்குடைகள் வருகிற 21-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பதியை சென்றடைகிறது.

அன்று மதியம் 3 மணிக்கு ஏழுமலையானுக்கு வஸ்திரம், மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.


Next Story