திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர்சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் பிரிவு உபசரிப்பு விழா
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர்சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி கலையரங்கில் மாணவ செவிலியர் சங்கமும், 3-ம் ஆண்டு மாணவிகளும் இணைந்து கல்லூரியில் படிப்பை முடித்து செல்லும் மாணவிகளுக்கு பிரிவு உபசரிப்பு விழாவை நடத்தினர். விழாவில், மாணவ செவிலிய சங்க ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், இக்கல்லூரியில் படிப்பை முடித்து செல்லும் மாணவிகளான நீங்கள் நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சவால்களாக எடுத்துக் கொண்டால் அதுவே நம் வாழ்வில் உயர்நிலையை அடைய செய்யும். மேலும் நம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கியமானதாக ஒழுக்கம், அறிவு, அணுகுமுறை, திறமை, நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவை உங்களை ஒரு பெரிய நிலையை அடைய செய்யும்' என்று கூறினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் என்.கலைக்குருசெல்வி, துணை முதல்வர் பெண்ணரசி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து மாணவிகள் பிருந்தா, சீதாதேவி, வைஷ்ணவி ஆகியோர் பேசும்போது, இக்கல்லூரி போன்ற கட்டமைப்பு, ஆய்வக வசதி, விடுதி வசதி, மருத்துவ பயிற்சி, கல்வி சிறப்பு பயிற்சி, உத்தியோகம் சார்ந்த பயிற்சி, இரவு விடுதி படிப்பு, சிறப்பு முகாம் நடத்துவதற்கான ஆளுமை திறன், கல்லூரியின் மூலம் கல்வி உதவித்தொகை மற்றும் உரிய காலத்தில் கல்வி உதவித்தொகை பெற்று கொடுத்தல் ஆகிய சிறப்பு அம்சங்கள் வேறு எங்கும் காண முடியாது என்று கூறினர்.
கல்லூரியிலிருந்து விடைபெறும் 4-ம் ஆண்டு மாணவிகள், கலைநிகழ்ச்சிகள் மூலம் தங்கள் நன்றியை தெரிவித்தனர். 4-ம் ஆண்டு மாணவி அஜிதா நன்றி கூறினார்.