திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் வேளாண் பட்டதாரிகள் அரசு மானிய நிதியில் தொழில் தொடங்க வாய்ப்பு


திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில்  வேளாண் பட்டதாரிகள் அரசு மானிய நிதியில் தொழில் தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் உள்ள வேளாண் பட்டதாரிகள் மானியத்துடன் கூடிய அரசு நிதி உதவியில் தொழில் தொடங்கலாம் என வேளாண்மை விரிவாக்க மைய உதவிஇயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் உள்ள வேளாண் பட்டதாரிகள் மானியத்துடன் கூடிய அரசு நிதி உதவியில் தொழில் தொடங்கலாம் என வேளாண்மை விரிவாக்க மைய உதவிஇயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர ்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் பட்டதாரிகள்

திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் 2022-23-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் கடன் உதவி பெற்று சுயதொழில்கள் தொடங்கலாம். தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீத மானியமாக அதிகபட்சமாக நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

தகுதிகள்

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், கணினித்திறன் பெற்றவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடையவர் ஆவார். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோரது நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாகவும், தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங் களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவை, திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக்கூடாது.

விரிவாக்க மையத்தை...

இதற்கு தேவையான ஆவணங்களான வேளாண்மை, தோட்டக்கலை வேளாண் பொறியியல் தொழிற்படிப்புக்கான சான்றிதழ் 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார்அட்டை, ரேசன் கார்டு, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணங்களுடன் திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story