திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா-29-ந்தேதி நடக்கிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா-29-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 26 Jun 2023 12:30 AM IST (Updated: 26 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

பக்தர்கள் சாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி வருசாபிஷேகம்

இ்ந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

தங்கமயில் வாகனம்

பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருசாபிஷேகம் நடக்கின்றது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story