வரி வசூலோ ரூ.9 கோடி...! செலவோ ரூ.11 கோடி...!திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புமைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் மைக் உடைக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
வெள்ளை அறிக்கை
திண்டிவனம் நகரமன்ற கூட்டம், அதன் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை. குப்பைகள் கூட அள்ளப்படவில்லை. ரூ.9 கோடி வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 33 வார்டுகளிலும் எந்தவித திட்டப்பணிகளும் நடைபெற வில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி வசூலானது ரூ.9 கோடி ஆனால் செலவானது ரூ.11 கோடி என்றார். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. உடனே கவுன்சிலர்கள் ரூ.11 கோடி செலவு செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
மைக்கை உடைத்த அ.தி.மு.க. கவுன்சிலர்
மேலும் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மைக்குகள் சரிவர செயல்படாததால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஜனார்த்தனன் தனது வார்டில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி மைக்கை கீழே போட்டு உடைத்தார். இதனால் திடீரென பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜனார்த்தனன் உள்ளிட்ட அ.தி.மு.க.கவுன்சிலர்கள் 4 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் ராம்குமார் கேள்வி கேட்டதற்கு, அலுவலர்கள் உட்காந்து பதில் சொன்னதால் ஆத்திரமடைந்த அவர், மக்கள் பிரதிநிதியான எங்களை மதிக்கவேண்டும் என்று கூறினார். அதன்பிறகு அலுவலர்கள் எழுந்து நின்று பதில் அளித்தனர். அதற்கு கவுன்சிலர் ராம்குமார் மரியாதையை கூட கேட்டு பெற வேண்டியுள்ளது என்றார். இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.