சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த சத்தத்துடன் விரிசல் விட்ட 'டைல்ஸ்'
சென்னை தலைமைச் செயலகத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் அதிக வெப்பம் தாங்காமல் உடைந்தது.
சென்னை:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும், சென்னையில் கடந்த 2 நாட்களாக வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. இதனால் சென்னைவாசிகள் சிரமத்துடன் வெளியே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தின் 4-வது நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட 'டைல்ஸ்'கள் நேற்று பிற்பகல் 'சடசட' என்ற சத்தத்துடன் திடீரென்று விரிசல் விட்டன. இதனால் அவை தரையில் இருந்து பெயர்ந்து மேலே தூக்கிய நிலையில் காணப்பட்டன. அந்த சத்தம் கேட்டு அங்கிருந்த பணியாளர்கள் பலர் பதற்றமடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, வெயில் அதிகமாக இருப்பதால் கீழிருக்கும் வெற்றிடத்தில் உள்ள காற்று உஷ்ணமடைந்து 'டைல்ஸ்'களை தள்ளிவிட்டு வெளியேறியுள்ளது. இதனால் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து, விரிசல் அடைந்த 'டைல்ஸ்'களை உடைத்து அப்புறப்படுத்தினார்கள். அந்த இடத்தில் தற்காலிமாக பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.