தாளவாடி அருகே அட்டகாசம்: மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை அடித்துக்கொன்ற புலி


தாளவாடி அருகே அட்டகாசம்: மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை அடித்துக்கொன்ற புலி
x

தாளவாடி அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புலி அடித்துக்கொன்றது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புலி அடித்துக்கொன்றது.

அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலிகள் அவ்வப்போது அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. காவலுக்காக விடப்பட்டிருக்கும் நாய்களையும் கொன்று அட்டகாசம் செய்கின்றன.

இந்த நிலையில் கொங்கள்ளி பகுதியை சேர்ந்தவர் புட்டண்ணா (வயது 57). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.

இறந்து கிடந்த மாடு

புட்டண்ணா நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் தனது கால்நடைகளை அவருடைய நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் கால்நடைகளை ஓட்டி வர சென்றார். அப்போது பசு மாடு ஒன்று இறந்து கிடந்ததை கண்டு் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மாட்டின் உடல் அருகே ஏதோ ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகி இருந்தது.

இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் நேற்று காலை அங்கு சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். மேலும் அருகே பதிவாகி இருந்த கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் பதிவானது புலியின் கால்தடம் என்பது தெரியவந்தது.

புலி கொன்றது

கொங்கள்ளியில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் ஜீர்கள்ளி வனப்பகுதி உள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய புலி ஒன்று கொங்கள்ளியில் உள்ள புட்டண்ணாவின் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது.

அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த அவரது பசு மாட்டை புலி அடித்துக்கொன்றுவிட்டு் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story