சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் மழை
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து, தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து, தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதிலும் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் வரை வெயில் வாட்டி வதைப்பதும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதுமான நிலையே இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில், இரவில் மழை என்ற சீதோஷ்ண நிலையை சென்னைவாசிகள் அனுபவித்து வருகின்றனர். இதனால் பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான நிலை மாறி விடுகிறது.
நேற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பிற்பகலில் வெயிலின் கொடுமையினால் அவதிப்பட்ட நிலையில் இரவு 8.30 மணிக்கு மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது.
சென்னை எழும்பூர், தியாகராயநகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், முகப்பேர், திருமங்கலம், வேளச்சேரி, நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாபுரம் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்குடி உள்பட சில இடங்களிலும் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் இன்றும் (திங்கட்கிழமை) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.