4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் மெயின் ரோடு குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கடந்த மே மாதம் 27-ந்தேதி இடப்பிரச்சினை தொடர்பாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தெற்கு காரசேரியை சேர்ந்த சுடலைமுத்து மகன்கள் இசக்கி பாண்டி (வயது 24), பேராச்சி (26) மற்றும் சுப்பையா மகன் மாடசாமி (20) ஆகிய 3 பேரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் பாலமுருகன் மற்றும் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஏற்று, 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதுதவிர அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்ற சேகர் (52). இவர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.