அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x

பண்ருட்டி அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்

புதுப்பேட்டை,

கடை அடைப்பு

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று (சனிக்கிழமை) கடலூர் மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி கிராமப்புறங்களில் இரவு நேரம் நிறுத்தப்படும் அரசு பஸ்கள் அனைத்தையும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருந்தது.

பஸ் மீது கல்வீச்சு

இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம் பெரியசேவலையில் இருந்து பண்ருட்டி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் சாலையில் வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் பஸ் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதை அடுத்து பயணிகள் பண்ருட்டியில் இறக்கிவிடப்பட்டு, சேதமடைந்த பஸ் பண்ருட்டி அரசு போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல்வீசி தாக்கிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story