தேசியக்கொடி பொருத்தப்பட்ட கார் மீது காலணி வீச்சு: பாஜகவினரின் தேசபக்தியை நாடு உணர்ந்துவிட்டது - அமைச்சர் கீதா ஜீவன்


தேசியக்கொடி பொருத்தப்பட்ட கார் மீது காலணி வீச்சு: பாஜகவினரின் தேசபக்தியை நாடு உணர்ந்துவிட்டது - அமைச்சர் கீதா ஜீவன்
x

தேசியக்கொடி பொருத்தப்பட்ட காரின் மீது காலணி வீசியதில் இருந்தே பாஜகவினரின் தேசபக்தியை நாடு உணர்ந்துவிட்டது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பெண்கள் வாரியம் சார்பில் பெண்கள் மாநாடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு சமூக நல மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர், அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது,

தென்னிந்திய திருச்சபை பேராயத்தினர் பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆதரவற்றோர் இல்லம், திருமணபதிவு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். தேசியக்கொடி பொருத்தப்பட்டிருக்கும் அமைச்சரின் வாகனத்தின் மீது செருப்பு தூக்கி வீசியதில் இருந்தே தெரிகிறது அவர்களுக்கு (பா.ஜ.க.வினருக்கு) எவ்வளவு தேசபக்தி இருக்கிறது என்பதை நாடு உணர்ந்துவிட்டது.

ஒரு வீரர் மரணம் அடைந்துவிட்டால் முதலில் அரசு மரியாதை செய்யப்படும். அதன்பிறகு அதில் கலந்து கொண்டவர்கள் மரியாதை செய்வார்கள். ஆனால், அரசு மரியாதையிலும் தடங்கல் பண்ணிவிட்டு அரசியல் செய்யும் அளவிற்கு இவ்வளவு படித்த ஒரு நபர் ஏன் தரம் தாழ்ந்து போனார் என்று தெரியவில்லை.

பெண்கள் மற்றும் மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத்துறையும் இணைந்து அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க இருக்கிறோம். மதிப்பெண்களை வைத்து குழந்தைகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story