நெல்லை ஆஸ்பத்திரியில் மூலம், பவுத்ரம் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நவீன லேசர் கருவி; டீன் ரவிச்சந்திரன் தகவல்


நெல்லை ஆஸ்பத்திரியில் மூலம், பவுத்ரம் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நவீன லேசர் கருவி; டீன் ரவிச்சந்திரன் தகவல்
x

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூலம், பவுத்ரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.16½ லட்சத்தில் நவீன லேசர் கருவி வாங்கப்பட்டு உள்ளது என்று டீன் ரவிச்சந்திரன் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூலம், பவுத்ரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.16½ லட்சத்தில் நவீன லேசர் கருவி வாங்கப்பட்டு உள்ளது என்று டீன் ரவிச்சந்திரன் கூறினார்.

நவீன லேசர் கருவி

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்தமிழகத்தில் முதல்முறையாக ஆசனவாய் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று இங்கு நவீன லேசர் கருவி வாங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில், ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இந்த கருவி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

இலவச சிகிச்சை

ஆசனவாய் நோய்களான மூலம், பவுத்ரம், வெடிப்பு ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த நவீன லேசர் கருவி வாங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகள் அன்றைய தினமே ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு செல்லலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்வலி மிகவும் குறைவு. தழும்பு இருக்காது. எல்லா வயதினரும் சிகிச்சை மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சையின்போது ரத்த இழப்பு கிடையாது. இதுபோன்ற சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும்.

முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இங்கு இலவசமாக ேலசர் அறுவை சிகிச்சை பெறலாம். 5 முதல் 7 நிமிடங்களுக்குள் சிகிச்சை முடிந்து விடும். காலையில் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை முடிந்தபின் அன்று மாலையே வீட்டுக்கு செல்லலாம்.

நரம்பு சுருட்டு சிகிச்சை

இதற்கு முன்பு நரம்பு சுருட்டு சிகிச்சை கருவி கடந்த 2019-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்மூலம் இதுவரை 165 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். இதில் 140 பேர் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற்று இருக்கின்றனர். இதன்மூலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

கொரோனாவுக்கு தற்போது மீண்டும் தனிவார்டு திறந்து உள்ளோம். 6 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஆஸ்பத்திரியில் 1,000 படுக்கைகளில் நேரடி ஆக்சிஜன் வசதி உள்ளது. பிரசவ வார்டில் கூடுதலாக 20 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், பொது அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் அலெக்ஸ் ஆர்தர் எட்வர்ட்ஸ், டாக்டர்கள் ரபீதாதேவி, ராஜ்மோகன், தீபன் கார்த்திக், ஜெனிட்டா, பபிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story