வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி தந்தை-2 மகள்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்
வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு இரட்டை குளம் அருகில் உள்ள லட்சுமி விலாஸ் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 51). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார். இவரது மனைவி பிரபா (48). இவர்களுக்கு தாரணி (19), தேவதர்ஷினி (17) என 2 மகள்கள் இருந்தனர். இதில் தாரணி சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேவதர்ஷினி பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் பிரபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பிரபாவை மனோகரன் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டுக்கு வந்த மனோகரன், இன்று காலை 11 மணிக்கு மனைவியை பார்ப்பதற்காக தனது 2 மகள்களுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். வேப்பம்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்த 3 பேரும் 1-வது நடைமேடையில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்தனர்.
சென்டிரல் செல்லும் மின்சார ரெயில் 4-வது நடைமேடைக்கு வந்ததால் அதில் ஏறி செல்வதற்காக 3 பேரும் வேகமாக தண்டவாளத்தை கடந்து சென்றனர். அந்த சமயத்தில் 3-வது நடைமேடையில் சென்டிரலில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் திவ்யதர்ஷினி, தாரணி ஆகியோர் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரெயில் மோதி பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார், உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்றுவர நடை மேம்பாலமோ, சுரங்கப்பாதையோ கிடையாது. தண்டவாளத்தை கடந்துதான் பயணிகள் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது.இந்த பணியையும் துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.