சித்திரை மாத அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


சித்திரை மாத அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 7 May 2024 11:48 AM IST (Updated: 7 May 2024 12:34 PM IST)
t-max-icont-min-icon

அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஸ்ரீராமர்,சீதை,அனுமன் வழிபட்ட சிவாலயமாகும். இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. அமாவாசை நாட்களில் பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று சித்திரை மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் துணிகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் அகற்றும் பணியில் 50- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கிழக்கு வாசல் பகுதியில் 500 மீட்டர் வரை தற்காலிக நிழல் தரும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story