தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கண்டனம்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4 ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர்கள், 5 ஆயிரத்து 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் தற்காலிகமாக நியமிப்பதை பெற்றோர்கள் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.

பா.ம.க. நிலைப்பாடு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது என்பதுதான் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படும் வாதம் ஆகும்.

ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் தகுதியையும், திறமையையும் நிரூபித்திருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தத் தேவையில்லை என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். 2018-ம் ஆண்டில் போட்டித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது அதை இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்த்தார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் போட்டித் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல், தற்காலிக நியமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், அந்த இரு வாக்குறுதிகளையும் மீறுவது நியாயமல்ல. எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

தமிழக அரசின் கொள்கை

ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதையும் தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடம் இருக்கும் நிலையில், அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நியமிப்பதை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story