மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்வு செய்து அவர்களை தமிழக முதல்-அமைச்சர் ஊக்குவித்து கவுரவிக்க உள்ளார். இதனைக் கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்-5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5 அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந்தேதி மாலை 5-45 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.