பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சீமான்


பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - சீமான்
x

மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கோன்மையாகும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 'பெல்' தனியார் பள்ளியில் படித்துவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் நரேனை பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனவுளைச்சலுக்கு ஆளாக்கிய பள்ளி நிர்வாகத்தின் செயல் பெரும் அதிர்ச்சியும், கடும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது. பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்பு பிள்ளையை இழந்துவாடும் மாணவர் நரேனின் பெற்றொருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடிய மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்துறையை ஏவி கைது செய்துள்ள திமுக அரசின் சிறிதும் மனச்சான்று அற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கோன்மையாகும். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் சமூகநீதி ஆட்சியா? கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாணவி அன்புமகள் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டபோது, பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட அதே கொடும் அணுகுமுறையையே தற்போதும் திமுக அரசு கடைபிடிப்பது வெட்கக்கேடானதாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது அறத்தின் பக்கம் நின்று பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து விரைந்து நீதிவிசாரணை செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story