பூப்பந்தாட்ட போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்


பூப்பந்தாட்ட போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தூத்துக்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் பல்கலைக்கழக மண்டல அளவிலான பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகளை வ.உ.சி. பொறியியல் கல்லூரி முதல்வர் சி.பீட்டர் தேவதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகள் நடந்தன.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியும், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அணியும் மோதின. இதில் 35-25, 35-32 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது இடத்தை நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அணியும், 3-வது இடத்தை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியும், 4-வது இடத்தை தூத்துக்குடி புனித மதர் தெரேசா பொறியியல் கல்லூரி அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அருள்ராஜ், நேஷனல் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கீதா, தூத்துக்குடி புனித மதர் தெரேசா பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினர். விழாவில் வ.உ.சி. பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சரவணன், ரெஜிலின் கிருபா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story