தூத்துக்குடி சிவந்தாகுளம்மாநகராட்சி பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கலெக்டரிடம் கோரிக்கை
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கலெக்டரிடம் மேலாண்மை குழுவினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதே போன்று மாறுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து 3 பெண்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றுகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
கூடுதல் ஆசிரியர்கள்
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 990 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நிரந்தர ஆசிரியர்கள் 15 பேர், மாற்று ஆசிரியர்கள் 7 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை 2 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தன்னார்வலர் ஆசிரியர்கள் 12 பேர் மூலம் வகுப்புகளை மேலாண்மை செய்தோம். தற்போது அவர்கள் பணிக்கு வரவில்லை. போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது. ஆகையால் உடனடியாக தகுந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
விதிகளை மீறி கரம்மை மண்...
அணியாபரநல்லூர் மீனாட்சி பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொந்தன்குறிச்சி குளத்தில் இருந்து உடன்குடி பகுதிக்கு கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் அளவுக்கு அதிகமாக மண் அள்ளி வருகின்றனர். இந்த மண்ணை வணிக நோக்கத்துக்காக கொண்டு செல்கின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தொண்டு நிறுவனம் மீது புகார்
ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்கள் ஆதவா தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை அணுகிய போது, சரிவர தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் எங்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும'் என்று கூறி உள்ளனர்.