தூத்துக்குடி: கிணறு தோண்டும் போது மண் சரிந்து விபத்து - தொழிலாளி பலி


தூத்துக்குடி: கிணறு தோண்டும் போது மண் சரிந்து விபத்து - தொழிலாளி பலி
x

தூத்துக்குடி அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.

தூத்துக்குடி


தூத்துக்குடியில் கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7-வது தெருவில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டில் கிணறு தோண்டும் பணி இன்று நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி வள்ளிநாயகிபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் மாரிமுத்து(வயது 20), ஜெகநாதன், ஜான்பால் ஆகிய 3 தொழிலாளர்களும் ஈடுபட்டு இருந்தனர். கிணறு சுமார் 13 அடி ஆழம் தோண்டப்பட்டு இருந்தது. அப்போது, மாரிமுத்து, ஜெகநாதன் ஆகிய 2 பேரும் கிணற்றின் உள்ளே இறங்கி மண் அள்ளிக் கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து விழுந்தது. இந்த மணல் குவியலில் மாரிமுத்து சிக்கிக் கொண்டார். இதில் மூச்சுத்திணறிய மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் ஜெகநாதன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் மற்றும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story