திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

சதுரங்க வல்லபநாதர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல்பெற்ற சிறப்புடையது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் இக்கோவிலில் தான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று முன்தினம் இரவு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மாதவன், செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், திருவிளக்கு பூஜை உபயதாரர்கள் செய்திருந்தனர்.






Next Story