மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது.3-ந் தேதி வரை நடக்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது.3-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்க விழா
மதுரை தமுக்கம் மைதானத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலொன், மேயர் இந்திராணி, கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.பி., பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மண்டல தலைவர் சரவணன் புவனேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோருக்கும் கல்வி- சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு நிதியுதவியுடன் புத்தக திருவிழாக்கள் நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அரசியல் நிகழ்வுகள்
அதன்படி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) மூலம் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் அரசு அமைப்புகளின் ஒருங் கிணைப்போடு அரசு நிதியுதவியுடன் சிறப்பாக நடத்தப் படுகிறது. மதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத்திருவிழா குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம்.
பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தக திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அங்கு 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற சிறப்பு அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை 13 வயதிற்கு உட்பட்ட மாணவர் களுக்கான சிறார் பயிலரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான படைப்பூக்கப் பயிலரங்கம், பகல் 2 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளுக்கான சிறார் சினிமா, பகல் 3 மணி முதல் 4 மணி வரை எழுத்துலக பிரபலங்கள் பங்கேற்கும் பிரபலங்கள் வாசிக்கிறார்கள், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் கதை கதையாம் காரணமாம் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சிந்தனை அரங்கம்
அதேபோல, காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாலை 4 மணி முதல் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 5 மணிக்கு கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.