திருவாரூரை சேர்ந்தவர் குவைத்தில் சுட்டுக்கொலை
காய்கறி வியாபாரம் கைகொடுக்காததால், குடும்பத்தை காப்பாற்ற ரூ.1½ லட்சம் கடன் வாங்கி குவைத் நாட்டுக்கு சென்றவர் அங்கு சுட்டுக்கொல்லப்பட்டார். ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 40). இவருக்கு திருமணமாகி வித்யா(32) என்ற மனைவியும், நித்தீஷ்குமார்(16), ரிஷிகுமார்(8) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
முத்துக்குமரன் லெட்சுமாங்குடி கடைவீதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். இந்த காய்கறி வியாபாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தனது மகன்களை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.
வெளிநாடு செல்ல முடிவு
இதனால் தனது குடும்பத்தை காப்பாற்ற அவர் வெளிநாடு செல்ல முடிவெடுத்தார். அதன்படி ஒருவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் கடனாக வாங்கி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். குவைத்துக்கு செல்லும் முன்பு கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கித்தர வேண்டும் என்று தன்னை குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்த நிறுவனத்தினரிடம் முத்துக்குமரன் கூறியுள்ளார்.
அதற்கு அவரை குவைத்துக்கு அனுப்பி வைத்த ஏஜெண்டும் சம்மதித்துள்ளார். ஆனால் குவைத்துக்கு சென்ற முத்துக்குமரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை.
ஒட்டகம் மேய்க்க...
மாறாக அந்த பகுதியில் உள்ள பணக்காரர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்து பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. இதனால் முத்துக்குமரன் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார். தான் எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒட்டகம் மேய்க்க கூறுகிறார்களே என்று மனம் உடைந்து போனார்.
உடனடியாக தனது மனைவி வித்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குவைத்தில் நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. பாலைவனத்தில் என்னை ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி கூட இல்லை என்று கூறி கதறி அழுதுள்ளார். தனது கணவர் கூறிய செய்தியை கேட்டு வித்யாவும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
அடி-உதை, கொலை மிரட்டல்
இந்த நிலையில் முத்துக்குமரன் குவைத்தில் உள்ள தனது முதலாளியிடம், ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய தனக்கு கஷ்டமாக உள்ளதாகவும், தான் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி, முத்துக்குமரனை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முத்துக்குமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.
சுட்டுக்கொலை
இந்த தகவலை அறிந்த அந்த முதலாளி, ஜாக்கூர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருந்த முத்துக்குமரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதை குவைத் விசாரணை குழுவினர் உறுதிசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதையறிந்து வித்யாவும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். இதுதொடர்பாக வித்யா திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் புகார்மனு கொடுத்துள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமரன் சாவுக்கு நீதிகேட்டு கூத்தாநல்லூரில் நேற்று பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர்.