திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை..!


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை..!
x
தினத்தந்தி 12 Feb 2023 9:14 AM IST (Updated: 12 Feb 2023 9:43 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

தண்டராம்பட்டு மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்து ரூ.33 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல போளூர் ரெயில் நிலையம் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்மை உடைத்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பியுள்ளனர்.

அதைபோல கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்ததால், 4 ஏடிஎம் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்கள் சேரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

4 ஏடிஎம் மையங்களிலும் ரூ.86 லட்சம் கொள்ளை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளை நடந்த 4 ஏடிஎம்களில், 3 எஸ்பிஐக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story