திருவள்ளூர், திருத்தணியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
திருவள்ளூர், திருத்தணியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவள்ளூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கி பள்ளி மாணவ-மாணவிகளிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து அவர் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க அதனை 200-க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணவிகள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன், நகர் மன்ற துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், திருவள்ளூர் துணை தாசில்தார் அருணா, திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் கணேஷ் மற்றும் திரளான நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பேரின்பச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்தியவேலு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழ்நாடு உருவாக மாணவர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் மாணவர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக அனைவரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வரவேற்றார். முடிவில், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.
திருத்தணி நகராட்சி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, திருத்தணி நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ. சந்திரன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதேபோல் திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை கலந்துகொண்டு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.