திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா; தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்திற்கு, தேரை அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கொடியேற்றம் வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ளது.
பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சியான 5 தேர்கள் பங்கேற்கும் தேரோட்டம் வரும் ஜூன் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 5 தேர்களை அலங்கரிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு சில தினங்களில் தேர்களில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக்கை சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிவடையும் எனவும், அதேபோல், தேர் செல்லும் சாலைகள் சீர்படுத்தும் பணி இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கி முடிவடையும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன் தலைமையில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.