திருமங்கலம் மைக்குடி கண்மாயை மரப்பாலத்தில் பீதியுடன் கடக்கும் விவசாயிகள்- பாலம் கட்டி தர கோரிக்கை
திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் மரப்பாலத்தில் விவசாயிகள் பீதியுடன் கடந்து செல்கின்றனர். பாலம் கட்டிதர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் மரப்பாலத்தில் விவசாயிகள் பீதியுடன் கடந்து செல்கின்றனர். பாலம் கட்டிதர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கண்மாய்
திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மைக்குடி கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயின் உள்பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் விளை நிலங்கள் உள்ளன. புஞ்சை நிலங்களில் விளையும் விளை பொருட்களை கொண்டு வருவதற்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்கள் கண்மாயை தாண்டி செல்ல வேண்டும்.
கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ள சமயங்களில் வாகனங்கள் கண்மாய் கரையை கடந்து செல்ல முடியாமல் தற்காலிகமாக மரங்கள் மற்றும் இரும்பு பாலங்கள் அமைத்து சென்று வருகின்றனர். இதனால் விவசாய பொருட்கள் கொண்டு வருவதற்கு மிகவும் பீதியுடன் கடந்து செல்கின்றனர். அத்துடன் கண்மாயின் உட்புறத்தில் நிலை நிறை குளத்து அய்யனார் கோவில் உள்ளது. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கண்மாய் தண்ணீரை தாண்டி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாலம் கட்ட கோரிக்கை
இந்த நிலையில் நேற்று மைக்குடி கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வியிடம் மனு கொடுத்தனர். அடுத்து வரும் மழைக்காலங்களில் கண்மாய் நிறைந்தால் பாலம் கட்டி விவசாயம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.