திருமகன் ஈவெரா மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலம் 17 ஆக குறைந்தது
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 18 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது. அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும். தமிழக சட்டசபை வருகிற 9-ந் தேதி கூடவுள்ள நிலையில், எம்.எல்.ஏ. மரணத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்று அதிகாரியிடம் கேட்டதற்கு, 'ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கவர்னர் உரை 9-ந் தேதி நடைபெறும். பின்னர் கூடும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் மரணம் தொடர்பாக ஆய்வு செய்யப்படலாம்.
அதன்படி, மறுநாள் 10-ந் தேதி சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவையை அன்று முழுவதும் ஒத்திவைக்க அந்த கூட்டத்தில் குழு முடிவு செய்யலாம். ஆனால் இதெல்லாம் அலுவல் ஆய்வு கூட்டத்தின் முடிவுக்கு உட்பட்டது' என்று தெரிவித்தார்.