சந்தானராமர் கோவிலில் திருக்கல்யாணம்
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் திருக்கல்யாணம்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் நடந்த ராமநவமி பெருவிழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இக்கோவில் ராமநவமி விழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைதொடர்ந்து நாள்தோறும் சாமி, தாயார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இரவு சந்தானராமர் வீதி உலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து பங்குனி உத்திரத்தையொட்டி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதற்காக திருமண சீர்வரிசை பக்தர்களால் எடுத்து வரப்பட்டது. வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்களைச்சொல்லி ராமர், சீதாபிராட்டியார் திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் சீதாபிராட்டியார், ராமர் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இரவு யானை வாகனத்தில் லெட்சுமிநாராயணன் சேவையாக ராமர், சீதாபிராட்டியார் திருவீதி புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.