சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்


சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
x

சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 4-ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், முதலில் விக்னேஸ்வர பூஜையுடன் கடம் வைத்து யாகம் நடைபெற்றது. பின்னர் சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதுபோல் கோவிலில் உள்ள பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும், எழுந்தருளிய தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருடாபிஷேகத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதற்காக கிராமத்தினர் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின்னர் வைதீக முறைப்படி சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அம்பாளுக்கு மாங்கல்யதாரணம் செய்யப்பட்டபோது பக்தர்கள் பக்தி சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள், விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜ பெருமான் ஆகிய உற்சவ மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கயிலை வாத்தியம் முழங்க சிறப்பு வீதி உலா வந்தனர். வீடுகள்தோறும் பக்தர்கள் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற வீதி உலா காட்சி மீண்டும் கோவிலில் விடையாற்றி வைபவத்துடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.


Next Story