தியாகராஜர் கோவில் ஆடிப்பூர விழா தேரோட்டம்


தியாகராஜர் கோவில் ஆடிப்பூர விழா தேரோட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடிப்பூர விழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடிப்பூர விழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆடிப்பூர திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் சர்வ தோஷ பரிகார தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் விளங்குகிறது.. தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாம்பாள் அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கமலாம்பாள் அம்மன் இந்திர வாகனம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை 9.15 மணிக்கு கோவிலில் இருந்து கமலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு விட்டவாசல் கோபுரம் வழியாக வந்து, நடைவாகன தெரு, சன்னதி தெருவழியாக சென்று காலை 10 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

இதை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரூரா, தியாகேசா, கமலாம்பாள் என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வெள்ளை சாத்துதல்

தேர் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி சென்று கிழக்கு வீதியில் உள்ள நிலையை அடைந்தது. இன்று(சனிக்கிழமை) காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆடிபூர தீர்த்தம், வெள்ளை சாத்துதல், பூரம் கழித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

தேரோட்டத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


Next Story