திருவையாறில் தியாகராஜர் 176-வது ஆராதனை விழா: தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்


திருவையாறில் தியாகராஜர் 176-வது ஆராதனை விழா: தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்
x

திருவையாறில் தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக 2 நாட்கள் விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற உள்ளது.

அதன்படி இந்த ஆண்டிற்கான 176-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். சபை செயலாளர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார்.

புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பஞ்சரத்ன கீர்த்தனைகள்

விழா வருகிற 11-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. தியாகராஜர் முக்தி அடைந்த பகுளபஞ்சமி தினமான 11-ந்தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இதில் 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார்.


Next Story