பூக்கடை பகுதியில் போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி


பூக்கடை பகுதியில் போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி
x

சென்னை பூக்கடை பகுதியில் போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர், தன்னுடைய நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

வியாபாரிகளான இவர்களை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள், "நாங்கள் போலீஸ், உங்கள் கையில் இருக்கும் பையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டு சோதனை செய்தனர். அதில் ரூ.24 லட்சம் இருந்தது.

அதற்கு வியாபாரிகள் இருவரும், "என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகை கடையில் எங்களிடம் இருந்த தங்க கட்டிகளை கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக ரூ.24 லட்சம் வாங்கி வருவதாக கூறினர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.இதை யடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த மர்மநபர்கள், போலீஸ் நிலையம் வந்து உரிய ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை வாங்கிச்செல்லும்படி கூறிவிட்டு சென்றனர்.

அதன்பிறகு பஷீர்அகமது, காஜா மொய்தீன் இருவரும் பூக்கடை போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி பணத்தை தரும்படி கேட்டனர். அப்போது போலீசார், அதுபோல் யாரும் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்யவில்லை என்று கூறினர்.

அதன்பிறகுதான் மர்மநபர்கள் போலீஸ் போல் நடித்து தங்களிடம் இருந்த ரூ.24 லட்சத்தை நூதனமுறையில் பறித்துச் சென்றதை இருவரும் உணர்ந்தனர். இதுகுறித்து பூக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story