தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேளாண்மை, உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் டிராக்டர்கள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று 4-வது நாளாக தூத்துக்குடி நகரில் 20 டிராக்டர்கள் மூலமாகவும், திருச்செந்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட பகுதியில் 30 டிராக்டர்கள் மற்றும் மினி லாரிகள் மூலமாகவும் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனங்களை எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் இருந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
யாரும் எதிர்பாராத அளவில் கனமழை பெய்துள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தோட்டக்கலை துறை சார்பில் டிராக்டர், மினி லாரிகள் மூலமாக 70 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக நிவாரணம் அளித்துள்ளார். மேலும் களத்தில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும், இடுபொருட்களை மானியமாக வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீட்டு தொகை, நிவாரண தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம், தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் கோரிக்கை குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறுகையில், 'விவசாயிகள், மக்களுக்கு நன்மை தர வேண்டும் என்பதற்காக நமது உணர்வினை அவர்களுக்கு தெரிவித்தோம். ஆனால் அதை அவர்கள் அரசியலாக பார்க்கின்றனர். அரசியல் செய்யும் நோக்கத்துடன் பேசுகின்றனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் சொல்லுகின்ற வார்த்தைகளில் கூட மென்மை இல்லை. அதில் ஒரு அனுதாபமும் இல்லை. அதைத்தான் மக்கள் வேதனையாக பார்க்கின்றனர்' என்றார்.