ஓட்டலில் பணம் கொடுக்காமல் ரகளை; சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது தாக்குதல்
பனவடலிசத்திரத்தில், ஓட்டலில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்து, சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது தாக்குதல் நடத்தியதாக ராணுவ வீரர், அரசு ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரத்தில், ஓட்டலில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்து, சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது தாக்குதல் நடத்தியதாக ராணுவ வீரர், அரசு ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓட்டலில் சாப்பிட்டனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் பஷீர் மைதீன் (வயது 70). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பரோட்டா கடை நடத்தி வருகிறார்.
அவருடைய ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஜோதிராஜ் (27), அதே ஊரைச்சேர்ந்த ராணுவ வீரர் முத்துப்பாண்டி (31), மற்றும் நண்பர்கள் அரசு ஊழியர் சசிபாண்டி (29), ராமச்சந்திரன் (25) ஆகிய 4 பேரும் சென்று சாப்பிட்டனர். அப்போது ஆம்லெட் கேட்டனர். பின்னர் 10 பார்சல் சாப்பாடு கேட்டு வாங்கினர்.
தகராறு
அதன்பிறகு, `உங்கள் ஓட்டல் சாப்பாடு சரியில்லை. அதனால் பணம் தர முடியாது', என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் உரிமையாளர் பஷீர் மைதீன் மற்றும் ஜோதிராஜ் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 4 பேரும் கடையை விட்டு வெளியே சென்று விட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்து ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்குள்ள மேஜை, கல்லாப்பெட்டிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதை தடுக்க முயன்ற ஓட்டல் உரிமையாளர் பஷீர் மைதீனை கீழே தள்ளி விட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
இதுபற்றி ஓட்டல் உரிமையாளர் பஷீர் மைதீன், பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெயராஜ் மற்றும் ஏட்டு வள்ளி மணவாளன் ஆகிய இருவரும் வந்தனர். ரகளையில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய முயற்சித்தனர். அப்போது ஆத்திரமடைந்த ராணுவ வீரர் முத்துப்பாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெயராஜ் மற்றும் வள்ளி மணவாளன் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதலாக போலீசார் அங்கு சென்றனர். தகராறில் ஈடுபட்டதாக ஜோதிராஜ், முத்துப்பாண்டி, சசிபாண்டி, ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் பனவடலிசத்திரம் போலீசார் கைது செய்தனர். 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் அழைத்து சென்ற காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.