மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்


மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் ஓட்டல் கழிவுகளை குமரியில் கொட்ட வந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அதைத்தொடர்ந்து லாரி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

அருமனை,

கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் ஓட்டல் கழிவுகளை குமரியில் கொட்ட வந்த 3 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அதைத்தொடர்ந்து லாரி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குமரியில் கொட்டப்படும் கழிவுகள்

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை லாரி மற்றும் டெம்போக்களில் ஏற்றி வந்து குமரி மாவட்ட எல்லை பகுதிகளில் கொட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.

தற்போது கேரளாவில் நிபா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நேரத்தில் மருத்துவ கழிவு மற்றும் இதர கழிவுகளையும் வாகனங்களில் ஏற்றி வந்து குமரி எல்லை பகுதியில் கொட்டுவதால் பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடைந்திருந்தனர்.

3 லாரிகள் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று மாலை பனச்சமூடு அருகே உள்ள புலியூர்சாலை பகுதி வழியாக திருவனந்தபுரம் மாநகராட்சி என்ற வாசகம் எழுதிய 3 லாரிகள் வந்தன. அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி பகுதியில் வந்த போது, 3 லாரிகளையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கழிவுகளை அகற்ற குத்தகைக்கு எடுத்திருந்தவர் மருத்துவ மற்றும் ஓட்டல் கழிவுகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டத்தில் கொட்டுவதற்காக வந்தது தெரிய வந்தது.

3 டிரைவர்கள் கைது

இதுபற்றி மஞ்சாலுமூடு ஊராட்சி தலைவி தீபா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் கேரள மாநிலம் மாராயமுட்டம் பகுதியை சேர்ந்த ரெஞ்சு (வயது 36), வண்ணாங்கோணத்தை சேர்ந்த அஜின் (28), கொல்லத்தைச் சேர்ந்த அஜித் (30) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.


Next Story