'மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத கல்வி கொள்கையை நம் மீது திணிக்கிறார்கள்' - நடிகை ரோகிணி விமர்சனம்
மக்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி கவலைப்படாத ஒரு கல்வி கொள்கையை நம் மீது திணிக்கிறார்கள் என்று நடிகை ரோகிணி தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வி.கே.புரம் மூன்று விளக்கு திடல் பகுதியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கலை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட நடிகையும், சங்கத்தின் துணை தலைவருமான ரோகிணி கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தெருக்கூத்து பாடல், தெம்மாங்கு பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வி.கே.புரம் பகுதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகை ரோகிணி பரிசு கேடயம் வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது;-
"படித்துவிட்டு வீட்டிற்காக வேலை செய்யும் குழந்தைகள் எத்தனை பேர் இந்தியாவில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை யோசிக்காத, மக்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி கவலைப்படாத ஒரு கல்வி கொள்கையை கொண்டு வந்து நம் மீது திணிக்கிறார்கள்.
ஏனென்றால் வேலையாட்கள் வேலையாட்களாவே இருக்க வேண்டும், வசதி வாய்ந்தவர்களின் குழந்தைகள் தான் அதிகாரத்தில் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்பது தான் திட்டம். தமிழகத்தில் இது வேண்டாம் என ஆரம்பத்திலேயே பேசி இருக்கிறோம்" என்று நடிகை ரோகிணி தெரிவித்தார்.