கோடை காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
கோைடகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
பேட்டி
கரூரில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். இரு தினங்களுக்கு முன்பு 400 மில்லியன் யூனிட் ஒரே நாளில் மின்நுகர்வு பயன்பாடு வந்துள்ளது.
ஒரு நாள் பயன்பாடாக ஏறத்தாழ 40 கோடி யூனிட்டை மக்கள் பயன்படுத்தி உள்ளனர். எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிகபட்ச மின்நுகர்வு இதுதான். இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதலில் இருந்துதான் காற்றாலையின் உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். வழக்கமாக அடுத்த மாதம் தான் காற்றாலை உற்பத்தி தொடங்கும்.
மின் வாரியத்திற்கு சேமிப்பு
கடந்த காலங்களில் தேவைக்கேற்ப மின்சாரம் எக்ஸ்சேஞ்சில் வெளிச்சந்தையில் வாங்குவார்கள். தற்போது அது தவிர்க்கப்பட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு எவ்வளவு மின்சாரம் கூடுதலாக தேவைப்படும் என்பதை கணக்கிடப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு ஒரு யூனிட் ரூ.8.50 என விலை நிர்ணயம் செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
டெண்டர் விடாமல் எக்ஸ்சேஞ்சில் வாங்கினால் ஒரு யூனிட் ரூ.12-க்கு தான் வாங்கி இருக்க வேண்டும். இதன்மூலம் இந்த கோடை காலத்திற்கு மட்டும் ரூ.1,312 கோடி முதல்-அமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின்சார வாரியத்திற்கு சேமிக்கப்பட்டு இருக்கிறது.
11 சதவீதம் குறைக்க நடவடிக்கை
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளோம். துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் கணக்கிடப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு அந்த கடைகள் மூடப்படும்.
ஏற்கனவே 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மொத்த டாஸ்மாக் கடைகளில் 11 சதவீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி உள்ளிட்ட 2 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை வாங்கி வைக்க போதிய இடம் இல்லாத நிலை உள்ளது. பரிசோதனை அளவில் இரு இடங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.
சீரான மின்வினியோகம்
மின்வாரியம் தொடர்பான புகார்கள் இருந்தால் மின்னகத்திற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அதற்கான குறைகள் உடனுக்குடன் களையப்படும். தமிழகத்தில் இப்போது வரை சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கோடைகாலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல், சீரான மின்வினியோகம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே எந்தவித பயமும், அச்சமும் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இந்த கோடைகாலத்தை சமாளிக்க கூடுதலான மின்சாரம் இருக்கிறது. எனவே மின்தேவை இன்னும் அதிகரித்தாலும் கூட அதை சமாளிப்பதற்கும் மின்சார வாரியம் தயாராக உள்ளது. அதனால் கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.