'கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டரில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை' - அமைச்சர் சேகர் பாபு
வெளிப்படைத் தன்மையோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான டெண்டர் கோரப்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்தவித சிறு தவறும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன. அனைத்திற்கும் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். டெண்டரில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை."
இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.