பா.ஜனதா சார்பில் வைத்த தகவல் பலகையில் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று இருந்ததால் பரபரப்பு
பா.ஜனதா சார்பில் வைத்த தகவல் பலகையில் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பா.ஜனதா சார்பில் வைத்த தகவல் பலகையில் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
அகஸ்தியர் அருவி
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மிக அருவியாக இருப்பதாலும், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
தற்போது சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை தணிக்கவும், பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதாலும் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் கார், வேன்களில் அகஸ்தியர் அருவிக்கு வந்து உற்சாகமாக குளிக்கின்றனர். இதனால் பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
பா.ஜனதா தகவல் பலகை
அகஸ்தியர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் நுழைவு கட்டணமாக நபருக்கு ரூ.30 மற்றும் வாகனத்திற்கு ஏற்ப தனித்தனி கட்டணமும் வசூல் செய்கின்றனர். மேலும் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதிக்கப்பட்டு, மாலை 5.30 மணிக்குள் வனப்பகுதியை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை சார்பாக பாபநாசம் வனச்சோதனை சாவடி அருகில் தகவல் பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வனத்துறையின் தகவல் பலகை அருகில் பா.ஜனதா சார்பில் நேற்று மற்றொரு தகவல் பலகை வைக்கப்பட்டது.
அதில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எழுதி இருந்தது. இதனால் குழப்பம் நிலவியது. இதுகுறித்து சிலர் வனத்துறையினரிடம் முறையிட்டதால் பரபரப்பு நிலவியது.
வனத்துறை விளக்கம்
இதையடுத்து அங்கு தகவல் பலகை அமைத்த பா.ஜனதாவினரிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனத்துறையினர் கூறுகையில், அகஸ்தியர் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அருவிக்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் காலை 8 மணிக்கு பதிலாக காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனுமதிப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினரின் பலகையிலும் உள்ளே செல்ல காலை 8 மணி என்பதற்கு பதிலாக காலை 6.30 மணி என்று சிறிய தாளில் ஒட்டி திருத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து தகவல் பலகையையும் மாற்றுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதாவினர் வைத்திருந்த தகவல் பலகையை மூடி வைத்தனர்.