போலீஸ்காரர் என்பது தெரியாமலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு
சேலம் அருகே காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்தவர் போலீஸ்காரர் என்பது தெரியாமலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சாவு குறித்து நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் அருகே காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்தவர் போலீஸ்காரர் என்பது தெரியாமலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சாவு குறித்து நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ேபாலீஸ்காரர் மாயம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 51). இவருடைய மனைவி மாலா. இவர், போலீஸ் துணை கமிஷனர் லாவண்யாவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த என்னுடைய கணவர் ஜெயராமனை கடந்த ஒரு மாதமாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்த உதவி கமிஷனர் வெங்கடேசனுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
மர்மசாவு
விசாரணையில் ெஜயராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், மது போதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரிய வந்தது. மேலும் ஜெராமன் உடலை மீட்ட காரிப்பட்டி போலீசார், அடையாளம் தெரியவில்லை எனக்கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 வார காலம் பிணவறையில் வைத்திருந்ததும், அதன்பிறகு அடையாளம் காண முடியாமல் சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ததும் தெரிய வந்தது.
அதாவது, மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் போலீஸ்காரர் என்பது தெரியாமல் அடையாளம் தெரியாத நபர் என போலீசாரே அடக்கம் செய்து இருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நண்பரிடம் விசாரணை
இதற்கிடையே ஜெயராமனுடன் மது அருந்தியதாக அவருடைய நண்பர் விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, இருவரும் மது அருந்தியதாகவும், அவர் அதிக போதையில் இருந்ததால் அங்கேயே விட்டு வந்து விட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு ஜெயராமன் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. ஜெயராமன் சாவு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அவருடைய உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஜெயராமன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.