அரசு அதிகாரி ஜீப் டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றதால் பரபரப்பு
அரசு அதிகாரி ஜீப் டிரான்ஸ்பார்மரில் மோதியது.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சோமதாஸ். இவரது வீடு தேவகோட்டை மாந்தோப்பு வீதியில் உள்ளது. தினமும் அவர் அலுவலக ஜீப்பில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் சோமதாசை அழைப்பதற்காக அலுவலக ஜீப்பை் டிரைவர், அவரது வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது திடீரென ஜீப் இயங்கவில்லை. இதையடுத்து ஜீப்பை பின்னோக்கி தள்ளி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக காளையார்கோவில் அருகே உள்ள பள்ளிதம்மம் பகுதியை சேர்ந்த சேது மகன் சரவணன் (வயது 30), குணசேகரன் மகன் ராஜன் (25) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள், யூனியன் அலுவலக ஜீப் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் இருவரும் காயம் அடைந்தனர். இதற்கிடையே அந்த ஜீப் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைபட்டது. இதற்கிடையே காயம் அடைந்த இருவரும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தேவகோட்டை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.