நெல் கொள்முதலில் முறைகேடு கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நெல் கொள்முதலில் முறைகேடு கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நெல் கொள்முதலில் முறைகேடு கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்ததுடன், இதுகுறித்து தமிழக அரசின் நடவடிக்கைகள் குறி்த்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

மதுரை

மதுரை,

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

நெல் கொள்முதல் மையங்கள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த சுவாமிமலை சுந்தர விமல்நாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராக உள்ளேன். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட ஒரு நெல் மூடைக்கு, ஒரு விவசாயி ரூ.40 முதல் 50 ரூபாய் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் கூடுதலான எடையில் நெல் மூடையை கொண்டுவர வேண்டிய அவலமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதுபோல அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

தடுப்பு நடவடிக்கைகள்

இந்த முறைகேடுகளை தடுக்க தஞ்சாவூர் மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் மையங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு நடத்தி, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகளின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும்.

அதேபோல நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகளை விற்பனை செய்ய வரும் விவசாயிகளின் பெயர், அவரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளின் விவரம் போன்றவற்றை அச்சிட்டு ரசீது வழங்க வேண்டும்.

சோளம், உளுந்து, துவரம்பருப்பு போன்ற வகை பயிர்களைப்போலவே நெல்லையும் ஒரு மூடையின் எடையை 75 கிலோ அல்லது 100 கிலோ என நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல்மணிகளை நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டுமானால், ஒரு மூடைக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்திக்கின்றனர் என வாதாடினார்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, நெல் கொள்முதல் முறை அனைத்தும் ஆன்லைனில் தான் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.

ஆன்லைனிலும் முறைகேடு

அதற்கு நீதிபதி சுப்பிரமணியன், நானும் கூட விவசாயி தான். மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார்கள் பற்றி அறிவேன். தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவும் முறைகேடு நடக்கின்றன. கூகுள் பே மூலமாக பணம் பெறப்படுகிறது. நெல் கொள்முதலில் எக்காரணம் கொண்டும் முறைகேடு நடப்பதை ஏற்க முடியாது, என்றார்.

பின்னர் இந்த வழக்கு குறித்தும், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story