இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை
இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை
இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி-20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன் கனகசபாபதி உள்பட பலர் கலந்துகொண்டு புத்தகத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர்.
பின்னர் துணைவேந்தர் கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நரேந்திர மோடி என்ற இந்திய குடிமகன் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது பெரும் முயற்சி, உழைப்பால் குஜராத் மாநிலத்தில் 3 முறை முதல்-அமைச்சராகவும், 2 முறை இந்திய பிரமதர் என்ற உயர்நிலையை அடைந்ததற்கான காரணங்கள் என்பது குறித்து மோடி-20 என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கட்டாய மொழியாக்குவது தவறு
தமிழ் மொழி தாயை போன்றது அதனை என்றும் நாம் மறக்க முடியாது. தாய் மொழி இல்லை என்றால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அதே நேரத்தில் இந்தியாவில் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது இந்தியை கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனை கட்டாய மொழியாக்குவது தவறு.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 534 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இங்கு தமிழ் மொழி மூலம் தேர்வு எழுதும் வசதியை தொடங்கி உள்ளோம்.
நுழைவு தேர்வு
பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய மதிப்பெண்கள் வெவ்வேறாக உள்ளன. எனவே அவர்களை ஒருங்கிணைப்படுத்துவதற்கு ஒரு நுழைவு தேர்வு என்பது தேவைப்படுகிறது. உயர்கல்வி கிராமங்களுக்கு சென்று போய் சேர வேண்டும் கிராமத்தில் உயர் கல்வி இல்லை என்றால் அந்த உயர் கல்வி இந்த நாட்டிற்கு தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.