துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பஞ்சாப் கவர்னரின் கருத்தில் உண்மை இல்லை- கே.பி.அன்பழகன்


துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பஞ்சாப் கவர்னரின் கருத்தில் உண்மை இல்லை- கே.பி.அன்பழகன்
x

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பஞ்சாப் கவர்னர் கூறிய கருத்தில் உண்மை இல்லை என்று முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

உண்மை இல்லை

தர்மபுரியில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது பஞ்சாப் மாநில கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோகித் முன்பு தமிழகத்தில் கவர்னராக இருந்தபோது துணைவேந்தர் நியமனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என்று ஒரு விழாவில் பேசினார். நான் அப்போதே அவருடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளேன்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்தபோது துணைவேந்தர் நியமனத்திற்கு தமிழகத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பணம் பெறும் நிலை இருந்ததாக ஒரு கருத்தை தற்போது அவர் கூறியுள்ளார். அந்த கருத்தில் உண்மை இல்லை.

அரசுக்கு தொடர்பு இல்லை

ஒரு துணைவேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழு 10 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்புகிறது. இந்த 10 பேரில் 3 பேரை தேர்வு செய்து அவர்களிடம் கவர்னர் நேர்காணல் நடத்துகிறார். இந்த நேர்காணலில் அரசுக்கோ, அப்போதைய முதல்-அமைச்சருக்கோ, உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ தொடர்பு இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்கப்படும் நிலை இருந்ததாக பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

தவறான தகவல்

இப்போது பஞ்சாப் மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு கவர்னருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க கவர்னரை சார்ந்தது. அதில் எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு கவர்னரே. ஒருவேளை அவ்வாறு பணம் கை மாறி இருந்தால் அது கவர்னரையே சாரும். மேலும் 22 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்து இருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல். இவ்வாறு கே.பி.அன்பழகன் கூறினார்.


Next Story