குரங்கு அம்மை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
குரங்கு அம்மை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கன்னியாகுமரி,
குரங்கு அம்மை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆய்வு
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் குமரி வந்தார். அவர் நேற்று கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதன்பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 300 பேர் முதல் 350 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். மாதம் ஒன்றுக்கு 15 முதல் 20 பிரசவங்கள் நடக்கிறது. இங்கு பிரேத பரிேசாதனை கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி பிரேதபரிசோதனை கூடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், 108 வாகனத்தை நாளையே இங்கு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய கட்டிடங்கள்
நெய்யூர் பேரூராட்சி மேக்கோட்டில், விளவங்கோடு ஊராட்சி ஈத்தவிளை கிராமத்தில் தலா ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையங்களை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
குருந்தங்கோடு, இடைக்கோடு, செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், கோதநல்லூர் சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் ரூ.40.4 கோடியில் கட்டப்பட உள்ளது.
ஆறுதேசம், கணபதிபுரம், பளுகல் ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.2.48 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
தரம் உயர்வு
வடிவீஸ்வரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடியில் புதிய கட்டிடம் கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மேம்படுத்த 113 கிராம சுகாதார நிலையங்களை நல வாழ்வு மையங்களாக தரம் உயர்த்த ரூ.16.80 லட்சம் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோய் சிகிச்சை மையத்தை மேம்படுத்த ரூ.16 கோடியில் லினாக் கருவி வழங்கப்பட உள்ளது.
குரங்கு அம்மை நோய்
உலகில் தற்போது கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை ே்நாய் பரவதொடங்கி உள்ளது. இதுபற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. இது தொற்றும் இல்லை.
ஆஸ்திரேலியாவில் 2 பேர், பெல்ஜியம் 3 பேர், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே நம் துறையின் சார்பில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை விமான நிலையத்தில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, பேரூராட்சித் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.