எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்பே இல்லை -ஜெயக்குமார் பேட்டி


எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்பே இல்லை -ஜெயக்குமார் பேட்டி
x

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. வெற்றி பெறாது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் தி.மு.க., அரசு எந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்துகிறது. குறுக்கு வழியில் சென்றாலும், அமைச்சர்கள் முகாமிட்டு பணத்தை வாரிவாரி இறைத்தாலும் தி.மு.க. வெற்றி பெறாது. அமைச்சர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி வாரியாக பிரித்துக்கொண்டு, அங்கு அமைச்சர்கள் வரும்போது ஆரத்தி எடுப்பதுபோல் வாய்ப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். அப்போது ஒரு தட்டு, சொம்பு, தேங்காய், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொடுக்கின்றனர்.

ஆதாரத்துடன் புகார்

அரசு சொத்துகளில் தேர்தல் விளம்பரம் செய்ய கூடாது. ஆனால் சாலைகளிலேயே கட்சி சின்னத்தை வரைந்து உள்ளனர். தி.மு.க.வினர் பணநாயகத்தை நம்பி ஜனநாயகத்தை படுகொலை செய்கின்றனர். நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடக்கவிடாமல் செயல்படுகின்றனர்.

அதை தடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து உள்ளோம். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து உள்ளார்.

சந்திக்க வாய்ப்பு இல்லை

ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் வாங்கியது பற்றி கேட்டால், 'கசாப்பு கடைக்காரரை ஆடு நம்பினால், அதற்கு என்ன கதி ஆகும்?' என்பது போன்றதாகும். இரட்டை இலை சின்னத்திற்காகதான் வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக அவர் கூறினாலும், அது 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற கதை போன்றதுதான்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்திப்பார்களா? என்று கேட்டால், 'அது எப்படி முடியும்?' அதற்கு வாய்ப்பே இல்லை. இரட்டை இலையை முடக்க முயற்சி செய்து பார்த்துவிட்டு, அது முடியாமல் போனதால் இப்படியொரு உண்மையற்ற பிரசாரத்தை கிளப்பி விட்டு உள்ளனர். தி.மு.க.வினரை புகழ்பாடி, தி.மு.க. சார்பு நிலையில் உள்ள அவரை அ.தி.மு.க. தொண்டன் ஏற்க மாட்டான்.

சமாதான பேச்சுவார்த்தை

இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் கட்சி தொண்டர்களும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களும் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். எனவே அதன் அடிப்படையில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்துக்காக ஓட்டு கேட்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவதும் முரண்பாடுதான்.

வேட்பாளரின் பெயரை சொல்ல முடியாதா? 'எட்டி எட்டிப் பார்த்தும் திராட்சைப் பழம் கிடைக்காவிட்டால், அந்தப் பழம் புளிக்கும்' என்று கூறுவதுபோல் உள்ளது.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை என்பது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story