'அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை' டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்


அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்
x

அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக கூறினார்.

அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் கட்சி பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.ம.மு.க.வை பலப்படுத்துகிற பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை. அந்த தவறை என்றைக்கும் நாங்கள் செய்ய மாட்டோம். தற்போது நாங்கள் வளர்ந்து வருகிற இயக்கம்.

எங்கள் பலம், உயரம் எங்களுக்கு தெரியும். தமிழகத்தில் வருங்காலத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய உறுதியை கொண்ட தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை நாங்கள் போராடுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம்.

ஜெயலலிதா இருந்தபோது தேர்தலில் கிடைத்த வெற்றி எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் இருக்காது. ஏனென்றால் ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். ஆனால் சரியான கூட்டணி அமைத்து ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றி அடைய முடியும். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க முடியும்.

அ.தி.மு.க.வின் சின்னம் மட்டும் அவர்களிடம் இல்லையென்றால் நெல்லிக்காய் மூட்டை போன்று கலைந்து சிதறி இருப்பார்கள். அ.ம.மு.க.வில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம். எனது நெருங்கிய உறவினர்கள் யாரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. எங்கள் சித்தி (சசிகலா) அ.ம.மு.க. செயல்பாட்டில் தலையிடுவது இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் தான் செய்த தவறை உணர்ந்து இன்றைக்கு எது சரியோ, அதை பற்றி பேசுவதால் நான் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறேன். இதில் சாதி, மதம் எதுவும் கிடையாது.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு. ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால், தனித்து தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story