செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நாட்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை - ஆர்.டி.ஓ. தகவல்
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நாட்களில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை எதுவும் இல்லை என்று செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டி முன்னேற்பாடுகள் குறித்தும், சர்வதேச செஸ் வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி அரங்கில் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாமல்லபுரம் ஓட்டல், விடுதிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஓட்டல்கள், விடுதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மாமல்லபுரத்தில் அனுமதிக்கப்படுவார்களா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து பேசிய ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா:-
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்கலாம். மாமல்லபுரத்தில் தங்குவதற்கு மட்டும் அவர்களுக்கு அறைகள் கிடைக்க வாய்ப்பு குறைவாக இருக்கும். காரணம் செஸ் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு அனைத்து அறைகளையும் தமிழக அரசு பதிவு செய்துவிட்டதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த குறிப்பிட்ட நாட்களில் விடுதிகளில் தங்குவதற்கு அறைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரம் நகரத்தை சுகாதாரமாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். போட்டி நடைபெற உள்ளதால் உலக நாடுகளின் கவனம் மாமல்லபுரம் நகரம் மீது திரும்பி உள்ளதால் இங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் ஓட்டல்கள், மற்றும் விடுதிகள் அசோசியேஷன் தலைவர் ஜனார்த்தனம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.